தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஞானபீடத்தில் அமரும் விழா - திரளானோர் பங்கேற்பு
தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஞானபீடத்தில் அமரும் விழா நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வயது மூப்பு காரணமாக கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். தருமபுரம் மேலகுருமூர்த்தத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தருமபுரம் ஆதீனத்தின் இளைய சன்னிதானம் தினமும் பூஜைகள் செய்து வந்தார். நேற்று அந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து குருபூஜை விழா நடந்தது. இளைய சன்னிதானம், சிவலிங்கத்திற்கு பஞ்ச திரவியங்களால் அபிஷேகம் செய்து பட்டு சாத்தி, மலர் மாலை அணிவித்து தீப வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து குருமூர்த்த வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் இளைய சன்னிதானம் அங்கிருந்து புறப்பட்டு ஆதீன வளாகத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஞானபுரீஸ்வரர் சாமிக்கு ருத்ரா அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் ஆதீன வளாகத்தில் உள்ள தருமபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் ஆகிய கோவில்களுக்கு சென்று இளைய சன்னிதானம் வழிபாடு செய்தார்.
இதனையடுத்து கோ-பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் சொக்கநாதர் வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து மேள-தாளம் முழங்க சிவாச்சாரியார்கள் தேவாரம் திருவாசகம் பாட இளைய சன்னிதானம், சித்ரா ஆசனமாகிய ஞானபீடத்தில் எழுந்தருளினார்.
திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான், தருமபுரத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக ஞானபீடம் ஏறிய மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு வில்வ கிரீடம் அணிவித்து பட்டு சாத்தினார். பின்னர் மகாதீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக பீடத்தில் அமர்ந்தவுடன் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மரபுபடி பனை ஓலையில் முதல் கையொப்பமிட்டார்.
நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு சைவ மடங்களின் குருமகா சன்னிதானங்கள், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான்கள், திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான்கள், தருமபுர ஆதீன கல்வி நிலையங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு சேவை சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 27 கோவில்கள், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 30 கோவில்கள், காஞ்சி சங்கரமடம், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதங்கள் குருமகா சன்னிதானத்திடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story