தேனி அருகே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்வு - அதிகாரிகள் விசாரணை


தேனி அருகே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்வு - அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 3:45 AM IST (Updated: 14 Dec 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே உள்ளது, ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர் பதவி இந்த முறை ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த முறை இந்த ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சிக்கு 2-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்கிடையே ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்களை போட்டியின்றி தேர்வு செய்வதற்கு குலுக்கல் முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கிராம கூட்டம் நடத்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்தனர். இதற்காக ஒலி பெருக்கி மூலம் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று காலையில் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிராம மக்கள் கூடினர். அங்கு ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட விரும்பும் நபர்களின் பெயர் கேட்கப்பட்டது. வார்டு வாரியாக விருப்பம் தெரிவித்த நபர்களின் பெயர்கள் தனித்தனியாக துண்டுச் சீட்டுகளில் எழுதப்பட்டன. பின்னர் அவை குலுக்கல் முறையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு நபர் வீதம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வேட்பாளர் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்வது என்றும், அவ்வாறு மனு தாக்கல் செய்யும் நபர்களை போட்டியிட்டு தேர்வு செய்ய வைப்பது என்றும் கிராம மக்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் உள்ள 9 வார்டுகளில், 3-வது வார்டை தவிர்த்து மற்ற 8 வார்டுகளுக்கும் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற சிலருக்கு, அவர்கள் விரும்பிய நபர்களின் பெயர் குலுக்கலில் தேர்வு செய்யப்படாததால், தாங்கள் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யப்போவதாக கூறி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 9 வார்டுகளுக்கு இதுவரை 28 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிச் சென்றுள்ளனர். ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. ஒரு வார்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர் மனு தாக்கல் செய்தால் மட்டுமே வாக்குப்பதிவு நடக்கும். ஒரு நபர் மட்டுமே மனு தாக்கல் செய்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். இருப்பினும் பதவிகள் ஏலம் விடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Next Story