பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களால் போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
உள்ளாட்சி தேர்தலில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் வருகிற 30-ந் தேதி 174 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி காலை 8 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணும் மையமான பாடாலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள பதிவான வாக்குப்பெட்டிகளை வைப்பதற்கான அறையினையும், வாக்கு சீட்டுகள் பிரிக்கும் அறையினையும், வாக்கு சீட்டினை எண்ணும் அறையினையும் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைப்பதற்கும், பத்திரிகை மற்றும் ஊடக மையம் அமைப்பதற்கான அறையினையும், மேலும் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்படவுள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள், ஏராளமான ஆதரவாளர்களை சரக்கு வாகனங்களை கூட்டி வந்ததால் பெரம்பலூர்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு 200 மீட்டர் தூரத்திற்குள் அதிகப்படியாக 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வந்த வாகனங்களும் நிறுத்தப் பட்டிருந்தது. மேலும் அலுவலகம் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு சாலையில் வெடிக்கப்பட்டது. எனவே போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குப்படுத்த கூடுதலாக போலீசாரையும், ஊர் காவல் படையினரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story