சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 4:30 AM IST (Updated: 14 Dec 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா டி.மங்கப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சீனிவாசன்(வயது28). லாரி கிளீனர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது நாமக்கல்லுக்கு கடத்தி சென்றார். பின்னர் அங்கிருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்று 3 மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று சிறுமியை மீட்டு வந்தனர். பின்னர் முசிறி அனைத்து மகளிர் போலீசார் சீனிவாசனை கைது செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வனிதா தீர்ப்பு அளித்தார். சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்து இருப்பதால் சீனிவாசன் 10 ஆண்டு மட்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் கூறினார்.

Next Story