கொடுங்கையூர் ரசாயன கிடங்கில் தீ விபத்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்


கொடுங்கையூர் ரசாயன கிடங்கில் தீ விபத்து   5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 8:18 PM GMT)

கொடுங்கையூரில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பெரம்பூர்,

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் கட்டாரி மற்றும் உமேஷ் ஆகியோருக்கு சொந்தமான ரசாயன கிடங்கு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் இயங்கி வருகிறது. இந்த குடோனில் சோப்பு பெயிண்ட், பாத்ரூம் ஆசிட் ஆகியவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மற்றும் ஆபத்தான ரசாயனம் ஆகியவை போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே செம்பியம், வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மின்கசிவு

இது ரசாயன கிடங்கு என்பதால் தீ வேகமாக பரவியதையடுத்து, ரசாயன கலவை கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மாவட்ட அதிகாரி ராஜேஷ் கன்னா மற்றும் கார்த்திக் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story