பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர் உள்பட 3 பேர் கைது


பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 10:45 PM GMT (Updated: 13 Dec 2019 9:11 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருள் விற்றதாக பல்கலைக்கழக மாணவர் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள், இணையதளம் மூலம் வெளிநாட்டில் இருந்து கஞ்சா விதைகளை வாங்கி பயிரிட்டு விற்றதும் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த அமாத்யா ரிஷி (வயது 23), மங்கல் முக்யா மங்கல் (30), பெங்களூரு பனசங்கரி அருகே உள்ள துவாரகா நகரை சேர்ந்த ஆதித்யா குமார் (21) என்பது தெரியவந்தது.

இதில் பீகாரை சேர்ந்த அமாத்யா ரிஷி பெங்களூரு மைசூரு ரோடு கெங்கேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து கொண்டு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இவர்கள் இணையதளம் மூலம் போதைப்பொருட்களை வாங்கி வீட்டில் பதுக்கி விற்பனை செய்தனர். அதாவது அமாத்யா ரிஷி ‘டார்க்வெப்‘ வழியாக போதைப்பொருட்களை வரவழைத்துள்ளார். அதாவது ‘டார்‘ என்ற தேடல் உலாவியில் ‘எம்பைர் மார்க்கெட்‘ என்ற ‘டார்க்வெப்சைட்‘ மூலம் அவர்கள் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா செடிக்கான விதையை நெதர்லாந்தில் இருந்து வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர்.

கஞ்சா செடி விதைகளை அவர்கள் பூந்தொட்டியில் போட்டு வளர்த்து உள்ளனர். அதற்காக வீட்டில் தனி அறையை அமைத்து, ஒளி சேர்க்கைக்காக எல்.இ.டி. மின்விளக்குகளை கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 225 கிராம் எல்.எஸ்.டி. ஸ்டீரிப்ஸ், 2 கிலோ கஞ்சா, ரூ.10,200 ரொக்கம், கஞ்சா செடி வளர்க்கப்பட்ட பூந்தொட்டிகள், கம்ப்யூட்டர், 3 செல்போன்கள், எல்.இ.டி. மின்விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்பட பிற பொருட்களை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பார்வையிட்டார். அப்போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story