திருச்சுழி அருகே பயங்கரம்: வயலுக்கு சென்ற விதவை பெண் கற்பழித்து கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


திருச்சுழி அருகே பயங்கரம்: வயலுக்கு சென்ற விதவை பெண் கற்பழித்து கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2019 3:45 AM IST (Updated: 14 Dec 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

வயலுக்கு சென்ற விதவை பெண்ணை கற்பழித்து கழுத்தை அறுத்து கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த பரளச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான விதவை பெண் அவர். அவருடைய கணவர் இறந்து 8 ஆண்டுகள் ஆகிறது.

அந்த பெண் தன்னுடைய 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றிருந்தார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தாயை காணாது அவருடைய பிள்ளைகள் பரிதவித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேடத் தொடங்கினர்.

வயல் காட்டில் சென்று தேடிய போது அங்கு ஓரிடத்தில் அந்த பெண்ணின் செருப்புகள் மட்டும் தனியாக கிடந்தன. ஆனால் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 30-க் கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோப்பநாய் உதவியுடன் இரவு முழுவதும் தேடினர்.

புதர் சூழ்ந்த பகுதிக்குள் அந்த பெண் பிணமாக கிடந்தார். மேலும் அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்ததால் அவர் கொடூரமான கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது ஆடைகள் களைந்து கிடந்தன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விவசாய வேலைக்கு சென்றிருந்த அந்த விதவை பெண்ணை, மர்ம நபர்கள் புதருக்குள் தூக்கிச் சென்று கற்பழித்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்தை பார்வையிட்டு விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜ் தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த கொடூர சம்பவத்தை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

வயலுக்கு சென்ற பெண்ணை மர்ம கும்பல் கற்பழித்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story