மாவட்ட செய்திகள்

பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேக்கு பா.ஜனதா தலைவர் எச்சரிக்கை: ‘கட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது’ + "||" + Pankaja Munde, to Eknath katce BJP leader warned

பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேக்கு பா.ஜனதா தலைவர் எச்சரிக்கை: ‘கட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது’

பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேக்கு பா.ஜனதா தலைவர் எச்சரிக்கை: ‘கட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது’
கட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது என்று பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேயை பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறைமுகமாக எச்சரித்தார்.
புனே,

மராட்டிய பாரதீய ஜனதாவில் உள்கட்சி பூசல் மூண்டு உள்ளது. முன்னாள் மந்திரிகளான ஏக்நாத் கட்சேவும், பங்கஜா முண்டேயும் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்டு வரும் ஏக்நாத் கட்சே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டேயின் தோல்விக்கும், தனது மகளின் தோல்விக்கும் பாரதீய ஜனதா தலைவர்கள் வேலை பார்த்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


மேலும் தான் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டால் வேறு வழியை சிந்திக்க வேண்டியிருக்கும் என கூறியதோடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவையும் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல பங்கஜா முண்டேயும் கட்சி அதிருப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். நேற்றுமுன்தினம் நடந்த தனது தந்தை கோபிநாத் முண்டே பிறந்தநாள் விழாவில் பேசிய பங்கஜா முண்டே பாரதீய ஜனதாவை ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட ஏக்நாத் கட்சேயும் தேவேந்திர பட்னாவிசை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், சோலாப்பூரில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டு பேசும்போது, அவர் பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேயை பெயரை குறிப்பிடாமல் எச்சரித்தார். இதுபற்றி அவர் பேசியதாவது:-

கட்சி விரோத நடவடிக்கைளைபொறுத்துக் கொள்ள முடியாது. கட்சிக்கு எதிராக நடப்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். சட்டசபை தேர்தலின் போது யாரும் மன்னிக்கப்படவில்லை என்பதை நீங்கள் கண்டு இருப்பீர்கள்.

தற்போதைய நிலைமை மத்திய மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பார்லியில் பங்கஜா முண்டே நடத்திய கோபிநாத் முண்டே பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், அங்கு சென்றால் முட்டை வீசப்படும் என்றும் என்னிடம் பலர் கூறினார்கள்.

அப்படி நான் போயிருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அங்கு சென்று பேசியது பல விஷயங்களை எளிதாக்கியது. கட்சியில் வேறுபாடுகள் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பங்கஜா முண்டே பெரிய பட்டியலையே கொடுத்தார். சூடான விவாதங்கள் இருக்கலாம். அது 4 சுவர்களுக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், பங்கஜா முண்டே தனது தேர்தல் தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது போட முயற்சிப்பதாகவும், அவர் கட்சியை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பாரதீய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் காகடே குற்றம் சாட்டி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...