இந்தியாவிலேயே முதன் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க செயலி சென்னை மாநகராட்சி அறிமுகம்


இந்தியாவிலேயே முதன் முறையாக   குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க செயலி   சென்னை மாநகராட்சி அறிமுகம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:23 PM GMT (Updated: 13 Dec 2019 10:23 PM GMT)

இந்தியாவிலேயே முதல் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க புதிய செல்போன் செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மக்கும் குப்பைகளாக இருக்கிறது. இந்த குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அதில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்தியாவில் முதல்முறையாக பிரித்தெடுக்கப்பட்ட திடக்கழிவுகளில் இருந்து, மறுபயன்பாடுள்ள பொருட்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்றின் அளவு ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்ச்’ என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலியை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிமுகம் செய்தார்.

இந்த இணையதளம் மற்றும் செயலியை ஸ்மார்ட் சிட்டி பணியாளர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையினரும் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

எங்கு கிடைக்கும்?

சென்னையில் ஒரு பகுதிகளில் இருந்து கிடைக்கும் மக்கும் குப்பைகளை அதே பகுதியிலேயே மக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மக்கும் குப்பைகளில் இருந்து உயிரி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களில் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

மாநகராட்சியில் உருவாகக்கூடிய ஈர கழிவுகளை, மாநகராட்சியே விரைவில் கையாளும் நிலை கொண்டு வரப்படும். குப்பை திடக்கழிவுகளில் இருந்து பெறப்படும் மறுபயன்பாடு உள்ள பொருட்கள் இருக்கும் இடம், அவற்றின் அளவு ஆகியவை ‘மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்ச்’ என்ற இணையதளத்திலும், செயலியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எங்கு சென்றால் இந்த மறுபயன்பாடு உள்ள பொருட்கள் கிடக்கும்? எப்படி வாங்கிக்கொள்ளலாம்? என்ற முழு தகவலையும் இந்த இணையதளம் மற்றும் செயலியின் மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு கழிவுகள் குறையும்

வீட்டில் இருந்து உருவாகும் கழிவுகளை மறுபயன்பாடு உள்ள பொருட்களாக தரம் பிரித்தால், ஒவ்வொரு வீடும் விற்பனை மையமாக மாறலாம். யார் வேண்டுமானாலும் இந்த வியாபாரத்தில் ஈடுபடலாம்.

இதன் மூலம் வீட்டில் இருந்து கிடைக்கப்படும் கழிவுகள் குறையும். மேலும் இந்த மறுபயன்பாடு கழிவுகளை மாநகராட்சிக்கு கொடுக்காமல், தாங்களே விற்பனை செய்ய நினைத்தால், அவர்கள் தங்களது விபரங்களை www.ma-d-r-asw-ast-e-ex-c-h-a-n-ge.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

சுகாதாரமான நகரம்

கழிவுகள் மற்றும் மறுபயன்பாடுள்ள பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதனை வாங்குவோர் யார் வேண்டுமானாலும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சென்னை மாநகராட்சியில் 2,250 பழைய பேப்பர் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வியாபாரம் செய்வதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுகாதாரமாகவும், ஆரோக்கியமான நகரமாகவும் சென்னை மாநகராட்சி உருமாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, தலைமை என்ஜினீயர் மகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story