பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து வயதான தம்பதி தற்கொலை


பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து வயதான தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:47 PM GMT (Updated: 13 Dec 2019 10:47 PM GMT)

பல்லடம் அருகே வயதான தம்பதி பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பல்லடம்,

பல்லடம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்ட வயதான தம்பதி பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த துயர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 85). இவருடைய மனைவி குப்பாத்தாள்(80). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணம் நடந்து கணவர்களுடன் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இதனால் காளிமுத்துவும், அவரது மனைவி குப்பத்தாளும் சித்தநாயக்கன்பாளையத்தில் தனியாக வசித்து வந்தனர். வயதாகி விட்டதால் இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் இருவரும் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் செஞ்சேரி பிரிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் செஞ்சேரி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடித்து விட்டு வெளியே வந்த அவர்கள் சிறிது தூரம் நடந்து விட்டு வருவதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் பெருமாள் கோவில் அருகில் பி.ஏ.பி. வாய்க்காலில் நேற்று மீட்கப்பட்டன. பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 2 பேரின் உடல்களும் செஞ்சேரி பிரிவில் இருந்து குள்ளம்பாளையத்துக்கு அடித்து வரப்பட்டு உள்ளது.

2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காமநாயக்கன்பாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக மிதந்த முதியவரின் சட்டை பையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கான அனுமதி சீட்டு கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது தான் இறந்தவர்கள் பெயர் விவரம் தெரிய வந்தது. கணவன்-மனைவி இருவரும் வயதான காரணத்தால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்து உள்ளனர்.

மகள்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்ததாலும், வயதான காரணத்தால் தங்களை கவனிக்க யாரும் இல்லையே என்ற கவலையுடன் இருந்து வந்து உள்ளனர். யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து வயதான தம்பதி இருவரும் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். நோய் கொடுமை காரணமாக தான் அவர்கள் இந்த முடிவை எடுத்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் சாவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story