உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கப்பட்ட பணியை ஏற்க மறுக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கலெக்டர் தகவல்


உள்ளாட்சி தேர்தல்   ஒதுக்கப்பட்ட பணியை ஏற்க மறுக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை   கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2019 4:38 AM IST (Updated: 14 Dec 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்ட பணியை ஏற்க மறுக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ந்தேதி 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக 1,403 வாக்குச்சாவடிகளுக்கு 1,403 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 9 ஆயிரத்து 308 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2-ம் கட்ட தேர்தல் வருகிற 30-ந்தேதியன்று 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,174 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. இதற்காக 1,174 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 7 ஆயிரத்து 688 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் வருகிற 15 மற்றும் 21-ந்தேதி மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

இந்த பயிற்சியில் அனைத்து அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர்கள் தமது நியமனத்தை தவிர்த்தல் அல்லது ஏற்க மறுத்தல் கூடாது. எவராவது ஓருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்வதற்கு போதுமான காரணமின்றி மறுத்தால் 1995-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதி 5(3)ன் கீழும், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story