கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே   மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
x
தினத்தந்தி 14 Dec 2019 4:40 AM IST (Updated: 14 Dec 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கொள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கவரைப்பேட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று கவரைப்பேட்டை பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் வழியாக தண்டவாளத்தை கடந்து கொள்ளூர் கிராமத்திற்கு யுவராஜ் செல்ல முற்பட்டார்.

அப்போது ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒரு பக்கமாக சென்று விழுந்த நிலையில் யுவராஜ் மட்டும் ரெயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story