மராட்டியத்தில், குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்காது - மந்திரி நிதின் ராவத் பரபரப்பு பேட்டி


மராட்டியத்தில், குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்காது - மந்திரி நிதின் ராவத் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2019 5:00 AM IST (Updated: 14 Dec 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது என்று அக்கட்சி மந்திரி நிதின் ராவத் கூறினார்.

மும்பை,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகி உள்ளது.

முன்னதாக இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த சிவசேனா ஆதரித்து வாக்களித்தது. இது அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநிலங்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, சிவசேனா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

இந்தநிலையில், மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என காங்கிரசை சேர்ந்த மந்திரி நிதின் ராவத் அதிரடியாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. அந்த மசோதாவை சிவசேனா மக்களவையில் ஆதரித்தது பற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் விவாதித்தது. மாநிலங்களவையில் சிவசேனா எடுத்த நிலைப்பாட்டில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். எனவே இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே எங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பார் என நம்புகிறேன். அந்த சட்டத்தை மராட்டியத்தில் நிறைவேற்றுவதற்கு ஒரு போதும் காங்கிரஸ் அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசின் மற்றொரு மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிக்கிறோம். இந்த பிரச்சினையில் காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்” என்றார்.

Next Story