கள்ளக்குறிச்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் - நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத்திட்ட மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். குடிமைபொருள் தனிதாசில்தார் பாண்டியன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, சுகாதாரப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் பொற்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கள்ளக்குறிச்சியில் உள்ள கடைவீதி, குளத்து மேட்டுத்தெரு உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. கள்ளக்குறிச்சி-சேலம் மெயின்ரோட்டில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலம், வீடு, இடம் பத்திரப் பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம் செய்வதில்லை. நியாய விலைகடையில் முறையாக அரிசி வழங்கப்படுவதில்லை உள்ளிட்டவைகள் குறித்து நுகர்வோர் பேசினர். இவற்றை கேட்டறிந்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி, தலைவர் முருகன், வேங்கைவாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் சம்பத், தியாகராஜன், மணி, உதவி மின்பொறியாளர் தமிழரசன், சுரேஷ்குமார், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ராசவேல், தொழிலாளர் உதவி ஆய்வாளர் சார்லி, வரி வசூல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னசேலம் சந்திரசேகரன், சங்கராபுரம் முருகன் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்துத்துறை அலுவலர்கள், நுகர்வோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story