உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, கடலூரில், தி.மு.க.வினர் சாலை மறியல்; 117 பேர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, கடலூரில், தி.மு.க.வினர் சாலை மறியல்; 117 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 14 Dec 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் சாலை மறியல் செய்த தி.மு.க.வினர் 117 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை ஒருவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது. இதை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுள்ளது. தொடர் போராட்டங்களும் நடந்து வருகிறது.

இதற்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சட்ட திருத்த நகலை கிழித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் உள்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதை அறிந்ததும் கடலூர் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாரதிசாலை- சில்வர் பீச் சாலை சிக்னலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பாரதிசாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதற்கு நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அகஸ்டின் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி கோவலன், நகர இளைஞரணி செயலாளர் இளையராஜா, துணை செயலாளர்கள் ஜெயசீலன், வெங்கடேசன், ஜெயச்சந்திரன், பிரசன்னா, மாவட்ட மகளிரணி எல்சா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலினை உடனே விடுதலை செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு மறியலில் ஈடுபட்ட 117 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். முன்னதாக இந்த மறியலால் பாரதிசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, கடலூர் குண்டுஉப்பலவாடி பெரியார்நகரை சேர்ந்த தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன் திடீரென தான் கையில் வைத்திருந்த கல்லை பஸ் கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அலறி அடித்தபடி வெளியேறினர். ஆனால் அதிர்‌‌ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை. டிரைவர் செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் வாஞ்சிநாதன் கோ‌‌ஷமிட்டார். உடன் அவரை கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story