பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது


பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 14 Dec 2019 5:42 AM IST (Updated: 14 Dec 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பொதுப் பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது53). பொதுப்பணித்துறை என்ஜினீயர். புதுவை அண்ணா நகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி மாலை தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

சத்யா நகர் அருகே சென்ற போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் சேர்ந்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் செல்வராஜை தாக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செயின்பால்பேட் பகுதியை சேர்ந்த நிவாஸ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த சந்துரு, அருண், திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர், ஜீவானந்தபுரம் தமிழ் என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே நிவாஸ் முன்ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினால் தான் செல்வராஜை தாக்கியதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர்? எதற்காக தாக்கினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.

Next Story