தோட்டக்கலை பயிர் சாகுபடி இலக்கை அதிகரிக்க புதிய செயல்திட்டம் - அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவு
தோட்டக்கலை பயிர்சாகுபடியில் இலக்கை அதிகரிக்க புதிய செயல்திட்டம் தயாரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த பழையபாளையம் கிராமத்தில் விவசாயி குமரேசன் தனது நிலத்தில் சொட்டுநீர்ப்பாசன வசதியில் கத்தரிக்காய், சாமந்தி மற்றும் மிளகாய் பயிர்கள் பயிரிட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு சாகுபடி குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிக மகசூல் பெறுவதற்கான உத்திகளை கடைபிடிக்குமாறு விவசாயி ஒருவருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதே போல் வேடல் கிராமத்தில் விவசாயி பாஸ்கர் என்பவர் 10 ஏக்கர் பரப்பில் சொட்டு நீர்ப்பாசன வசதி செய்து தர்பூசணியையும், செம்பேடு கிராமத்தில் ஜெயராமன் என்பவர் மிளகாய், தர்பூசணி, சாமந்தி பூ, கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வருவதையும் கலெக்டர் திவ்யதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் போன்ற இனங்களில் இலக்கு குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பதை பார்த்த கலெக்டர் திவ்யதர்ஷினி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் புதிய செயல் திட்டம் தயாரித்து ஒப்புதல் பெற தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது விவசாயிகள் தாங்கள் சர்க்கரை ஆலை மூலம் சொட்டு நீர் பாசனத்திற்கு பதிவு செய்து பயன்பெற முடியவில்லை எனவும், தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசன வசதி செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் கோரிக்கைகளை மீது உரிய நடவடிக்கை எடுக்க தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர், உதவி இயக்குனர், காவேரிப்பாக்கம், வாலாஜா தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story