ராணிப்பேட்டை பகுதியில் குண்டும் குழியுமாக மாறி வரும் அக்ராவரம்-பெல் சாலை - சீரமைக்க கோரிக்கை
மலைமேடு வழியாக பெல் தொழிற்சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலை அடியோடு நாசமாவதற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை பொன்னை சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த சாலையில் அக்ராவரம் அருகே ரெயில்வே பாலம் குறுக்கிடுகிறது. இதில் வேன் போன்ற சில வாகனங்கள் தான் பாலத்தின் உள்ளே செல்ல முடிகிறது. ஆனால் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் பாலத்தின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அதன் உயரம் குறைவாக உள்ளது.
இதனால் கனரக வாகனங்கள் அடுத்த அக்ராவரத்திலிருந்து மலைமேடு வழியாக பெல் தொழிற்சாலைக்கு செல்லும் சாலையை பயன்படுத்துகின்றன. ஏற்கனவே இந்த சாலை வழியாகத்தான் நெல்லிக்குப்பம் பகுதி 3-ல் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை உள்பட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை கனரக வாகனங்கள் ஏற்றி வருகின்றன. மேலும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.
இதேபோல் லாலாப்பேட்டை, நெல்லிக்குப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், தக்காம்பாளையம், கத்தாரிக்குப்பம், வசூர், பள்ளேரி, குமணந்தாங்கல், கொண்டகுப்பம், சத்திரம் புதூர், பொன்னை, கீரைசாத்து உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பஸ்கள் ராணிப்பேட்டை-பொன்னை சாலையில் உள்ள ரெயில்வே பாலத்திற்குள் நுழைய முடியாமல் மலைமேடு சாலை வழியாகதான் செல்கின்றன.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மலைமேடு வழியாக செல்லும் அக்ராவரம்-பெல் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தற்போது பெய்துள்ள மழையால் சாலைகளில் உள்ள ராட்சத பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
மிகவும் பழுதடைந்துள்ள இந்த சாலை விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே அடியோடு நாசமாவதற்குள் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story