திருப்பத்தூரில் விரைவில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை ஒன்றியம், புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள புதுப்பேட்டை அரசு சமுதாய சுகாதார நிலை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்- சேய் நல பெட்டகம் மற்றும் மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி வரவேற்றார். திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனாகார்க், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நாட்றம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் சுகாதாரத்துறை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, 170 தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினார்.
அதன் பிறகு ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பகுதிகளில் வெளி வர முடியாமல் வீட்டில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சுகாதார செவிலியர்கள் நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது :-
திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவிற்கு வந்த முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் மருத்துவ கல்லூரி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரமேஷ், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கே.ஜி.சுப்பிரமணி மற்றும் சுகாதார துறை பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் டாக்டர் சுமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story