அவினாசி ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணி; கடும் போக்குவரத்து நெரிசல் - கோவையில் வாகன ஓட்டிகள் அவதி


அவினாசி ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணி; கடும் போக்குவரத்து நெரிசல் - கோவையில் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 4:44 PM GMT)

கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரண மாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கோவை,

கோவை அவினாசி ரோடு மேம்பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தை தாங்கும் கான்கிரீட் தூண்களுக்கு அருகே மழை தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால் நேற்றுக்காலை 11 மணியளவில் அவினாசி ரோடு மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப்பட்டது. பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக காந்திபுரத்துக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

உப்பிலிபாளையத்தில் இருந்து மேம்பாலத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாதவாறு தண்டுமாரியம்மன் கோவில் அருகில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பாலத்தின் நுழைவு பகுதியில் இரும்புத் தடுப்புகள் வைத்து, அதில் பாலம் வேலை நடைபெறுகிறது. மாற்றுப் பாதையில் செல்லவும் என்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவினாசி ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் உள்ள இணைப்புகளில் இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்டு அதன் மீது சிமெண்டு கலவை போடப்பட்டது. இந்த பணிகள் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டன.

கோவையின் மேற்கு, தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவினாசி மேம்பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காலை நேரத்தில் பாலத்தில் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப்பட் டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதனால் அவினாசி சாலை, மில் ரோடு, புரூக் பாண்ட் சாலை, குட்ஷெட் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, நஞ்சப்பா சாலை ஆகியவற்றில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

என்ன காரணத்துக்காக போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கான்கிரீட் தூண் மீது தளம் சேரும் இடத்தில் உள்ள இரும்பு பட்டை விலகி இருந்தது. இதனால் வாகனங்கள் அவற்றின் மீது செல்லும் போது சத்தம் வந்தது. மேலும் அதில் உள்ள இடைவெளி வழியாக மழை தண்ணீர் கசிந்து பாலத்தின் தூண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை இருந்தது. எனவே தான் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி அவசரம் அவசரமாக பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியதாகி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

அவினாசி ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு வேலைகளை இரவு நேரங்களில் செய்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் பகல் நேரத்தில் போக்குவரத்தை திடீரென்று நிறுத்தி அந்த பணியை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அந்த பணியை இரவில் செய்திருக்கலாம். பாலத்தின் இடைவெளியில் இரும்புத் தகடுகளை பொருத்தி அதன் மீது சிமெண்டு பூசப்பட்டுள்ளது. மழை பெய்ததால் அது காய்வதற்கு பல மணி நேரம் ஆகும். அதுவரை அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.

அவினாசி மேம்பாலத்தில் பணிகள் நடைபெற்ற போது அதை இணைக்கும் சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளிடம் பாலம் வேலை நடப்பதால் வேறு வழியில் செல்லுங்கள் என்று தெரிவிக்க ஒரு போலீசார் கூட இல்லை. பால வேலை நடப்பது தெரியாமல் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பாலத்தின் அருகே எந்த இடத்திலும் ஒரு போலீஸ்காரர் கூட இல்லை. இதனால் போலீசாருக்கு தெரியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் பணியை மேற்கொண்டார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. அரசு துறையினர் கலந்து பேசி செயல்பட்டால் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story