5 பேர் சாவு எதிரொலி: லாட்டரி சீட்டுகள் விற்ற மேலும் 12 பேர் கைது
விழுப்புரத்தில் 5 பேர் இறந்ததன் எதிரொலியாக மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளால் வீடு, சொத்துக்களை இழந்து வறுமையில் வாடிய நகை தொழிலாளி அருண், தனது 3 பெண் குழந்தைகளுக்கு பாலில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றுவிட்டு மனைவியுடன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த துயர சம்பவத்தையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் நேற்றும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் விழுப்புரம் அருகே தென்னமாதேவியை சேர்ந்த சந்திரன் (வயது 56), விழுப்புரம் பகுதியை சேர்ந்த சரவணன் (35), விழுப்புரம் வடக்கு தெரு உசேன் (50), காணை அய்யப்பன் (34), கண்டமங்கலம் சந்திரசேகரன் (54), ஆரியூர் சிவஞானம் (50), திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் சங்கரராமன் (47), ஒட்டனந்தல் தண்டபாணி (49), மேமாளூரை சேர்ந்த அஞ்சாமணி (37), திண்டிவனம் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (25), திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை ராமச்சந்திரன் (64), காவேரிப்பாக்கம் முஸ்தபா (27) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story