மயிலம் அருகே, 3 கோவில்களில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலம் அருகே 3 கோவில்களில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு ரெயில் நிலையம் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலியை கொள்ளையடித்தனர். அதன் பிறகு அங்கிருந்த பீரோவை உடைத்து, நகை-பணம் ஏதும் உள்ளதா? என பார்த்தனர். பீரோவில் நகை-பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை கீழே வீசி விட்டு சென்று விட்டனர்.
இதைபோல் ரெயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் வளாக கதவு பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யனார் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த உண்டியல் பூட்டுகளை உடைத்து, அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை முத்துமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், அய்யனார் கோவில் ஆகிய 3 கோவில்களின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்த அந்தந்த பகுதி மக்கள் இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவில்களை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 3 கோவில்களிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் 3 கோவில்களில் இருந்த உண்டியல்கள், கதவுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். 3 கோவில்களிலும் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
மேலும் இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களுக்குள் புகுந்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story