மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,186 வழக்குகளுக்கு தீர்வு
மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 186 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திண்டுக்கல்,
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர், கொடைக்கானல் ஆகிய 8 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த, மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கினார். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரத்ராஜ், நீதிபதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒவ்வொரு வழக்குகளிலும் புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர் ஆகியோரை வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 12 அமர்வுகளில் நீதிபதிகள், வக்கீல்களை கொண்ட குழுவினர் வழக்குகளை விசாரித்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கேட்டு வழக்கு, வராக்கடன், காசோலை மோசடி வழக்கு உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 768 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் 271 வங்கி வராக்கடன் வழக்கு உள்பட 2 ஆயிரத்து 186 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தீர்வு தொகையாக ரூ.9 கோடியே 10 லட்சத்து 67 ஆயிரத்து 762 பெறப்பட்டது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. தீர்வு காணப்படாத 582 வழக்குகளுக்கு உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
பழனி சப்-கோர்ட்டில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான கோதண்டராஜ் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வராக்கடன் உள்ளிட்ட நிலுவையில் இருந்த 499 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.3 கோடி தீர்வுத்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிபதி ரகுபதிராஜா, விரைவு நீதிபதி மணிகண்டன் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story