தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல் - பள்ளிக்கூட மாணவர்கள் பார்வையிட்டனர்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல் - பள்ளிக்கூட மாணவர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 7:31 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இந்திய போர்க்கப்பல் நேற்று வந்தது. இந்த கப்பலை பள்ளிக்கூட மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

தூத்துக்குடி, 

இந்திய கடற்படை தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடற்படை தினத்தை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா என்ற கப்பல் நேற்று வந்தது. இந்த கப்பலை பள்ளிக்கூட மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிக்கூட மாணவர்கள் இந்த கப்பலை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வ.உ.சி. துறைமுகம் வந்தனர். அவர்கள் போர்க்கப்பலுக்குள் சென்று கப்பலில் வைக்கப்பட்டு இருந்த போர்க்கருவிகள், தற்காப்பு கருவிகள், கடற்படையின் சாதனைகள் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

அதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர்கல்வி படிக்கும் மாணவர்களும், பொதுமக்களும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போர்க்கப்பலை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கப்பலை பார்வையிட வருபவர்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக வரவேண்டும். செல்போன், பை, புகைப்படக்கருவி ஆகியவைகளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story