இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து: முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் - பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு


இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து: முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் - பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:30 PM GMT (Updated: 14 Dec 2019 7:57 PM GMT)

கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதற்கு முதல்-மந்திரி எடியூரப்பாவை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதோடு குடியுரிமை திருத்த சட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணிஆட்சி நடைபெற்றது. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் கூட்டணி அரசு கவிழ்ந்த உடன் முதல்-மந்திரியாக பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

அதாவது எடியூரப்பாவின் வயதை காரணம் காட்டி, அவரை முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிடம் தயக்கம் காட்டியது. அத்துடன் மந்திரிசபை விரிவாக்கம் செய்யவும் 20 நாட்கள் கழித்து தான் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியதுடன், அவரது விருப்பத்திற்கு எதிராக 3 துணை முதல்-மந்திரிகளையும் நியமித்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பாவை ஓரங்கட்ட கட்சி மேலிட தலைவர்கள் நினைப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி 12 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இடைத்தேர்தல் வெற்றியால் கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பாவின் கை ஓங்கியது. கட்சியில் அவருக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்தது. இடைத்தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதுபோல, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும், எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய இன்னும் ஒரு வாரம் கழித்து டெல்லிக்கு வரும்படி எடியூரப்பாவுக்கு அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் வீட்டிற்கு நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்காகவும், ஆட்சியை தக்க வைத்து கொண்டதற்காகவும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் எடியூரப்பாவுடன் 10 நிமிடங்களுக்கு மேலாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், கர்நாடகத்தில் உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும்படி எடியூரப்பாவிடம் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு, கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் எடியூரப்பாவிடம் அவர் கூறி உள்ளார்.

குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை விரைவில் வழங்குவதாகவும், அதுதொடர்பான விவரங்களை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், கிடப்பில் போடப்பட்டு இருக்கும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்குவதாகவும், புதிய திட்டங்களை செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி எடியூரப்பாவிடம் உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு தன்னை டெல்லிக்கு வந்து சந்திக்கும் படியும், கர்நாடகத்தில் மக்களுக்கான ஆட்சியை நடத்தும்படியும், உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். பிரதமர் தன்னுடன் டெலிபோனில் பேசியதால் முதல்-மந்திரி எடியூரப்பா மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.

Next Story