பிரசவத்தில் முடிந்த காதல்: பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரி கழிவறையில் போட்டு சென்ற பெண் பிடிபட்டார்


பிரசவத்தில் முடிந்த காதல்: பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரி கழிவறையில் போட்டு சென்ற பெண் பிடிபட்டார்
x
தினத்தந்தி 15 Dec 2019 3:15 AM IST (Updated: 15 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரி கழிவறையில் போட்டு சென்ற பெண் போலீசாரிடம் சிக்கினார்.

மும்பை,

மும்பை சயான் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் கூட்டம் மிகுதியாக இருந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக காத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு குறைமாத பிரசவத்தில் குழந்தை பிறந்தது.

இதன்பின்னர் பிறந்த பச்சிளம் குழந்தையை அங்கிருந்த பிளாஸ்டிக் வாளியில் போட்டுவிட்டு பெண் தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்ட ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வாளியில் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து டாக்டர்களிடம் தெரிவித்தார். இதன்பேரில் டாக்டர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பிறந்த குழந்தையை கழிவறையில் போட்டுச்சென்ற பெண்ணை கண்டுபிடிக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். இதில் அப்பெண் ஒரு டாக்சியில் ஏறி தப்பி சென்றது தெரியவந்தது.

இதனால் போலீசார் டாக்சியின் பதிவெண் மூலம் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவரின் உதவியுடன் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து நடத்திய விசாரணையில், அந்த பெண் சலூன் கடை பெண் ஊழியர் என்பது தெரியவந்தது. விவாகரத்தான அந்த பெண்ணிக்கு உடன் பணிபுரியும் வாலிபர் ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. அவருடனான பழக்கத்தால் அப்பெண் கர்ப்பமானார். இதை வீட்டிற்கு தெரியாமல் அவர் மறைத்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்தில் அவர் பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரி கழிவறையில் போட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story