தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 15 Dec 2019 4:00 AM IST (Updated: 15 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கந்தகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி சீதாராமன், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம், குடும்ப நலகோர்ட்டு நீதிபதி செல்வமுத்துக்குமாரி, மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி பரமராஜ் உள்ளிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தினார்கள். இதில் வழக்குதாரர்கள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், வழக்குகள் தொடர்பான துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்குகள், நிலுவையில் உள்ள பல்வேறு வகையான சமரச தீர்வு காணக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 6786 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்குகளுக்கு சமரசதீர்வு காண்பதற்கான விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தின் முடிவில் மொத்தம் 1097 வழக்குகளில் ரூ.4 கோடியே 54 லட்சத்து 34 ஆயிரத்து 533 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டது. மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள் செய்து இருந்தனர்.

கிருஷ்ணகிரி

கிரு‌‌ஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜி.கலாவதி தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நீதிபதி ரவி மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

855 வழக்கு

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 12 அமர்வுகளில் 2,573 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 855 வழக்குகளில் ரூ. 6 கோடியே 37 லட்சத்து 32 ஆயிரத்து 232-க்கு சமரச தீர்வு காணப்பட்டது. 

Next Story