அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:07 PM GMT (Updated: 14 Dec 2019 10:07 PM GMT)

அண்ணாமலை பல்கலைக்கழகக்தில் இருந்து பேராசிரியர்களை இடமாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகூர்கனி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆள் குறைப்பு நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கியது. அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் சிறப்பு சட்டம் இயற்றி, அந்த பல்கலைக்கழகம் அரசு வசம் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்த உபரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பல்வேறு அரசு கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பணி இடமாற்றம் செய்யவும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 60 ஆசிரியர்கள், 12 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பல்வேறு பல்கலைக்கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 2 இணை பேராசிரியர்கள், 7 உதவி பேராசிரியர்கள் உள்பட 41 ஆசிரியர்களையும், 4 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

அவர்களில் சிலர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் மாற்றப்படுகின்றனர். இங்கு கடந்த 12 ஆண்டுகளாக நான் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதற் கிடையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து இணை பேராசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் என்னை போன்றவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மேற்கண்ட அரசாரணையை ரத்து செய்யவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உரிய விளம்பரம் செய்து, நேரடியாக பேராசிரியர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

Next Story