திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 2 ஆயிரத்து 924 வழக்குகள் ரூ.53¾ கோடிக்கு சமரச தீர்வு


திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 2 ஆயிரத்து 924 வழக்குகள் ரூ.53¾ கோடிக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 15 Dec 2019 4:31 AM IST (Updated: 15 Dec 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 924 வழக்குகள் ரூ.53¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று காலை நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கோகிலா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி அனுராதா, கூடுதல் சார்பு நீதிபதி பிரிஷ்ணவ், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கவியரசன், திருநாவுக்கரசர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இடுவாய் சின்னகாளிபாளையத்தை சேர்ந்த கார்த்திக், அவருடைய மனைவி ஜோதி(வயது 28), மகன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி சேவூர் சாவக்காட்டுப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி 3 பேரும் காயமடைந்தனர்.

இதில் ஜோதிக்கு கை, கால், இடுப்பு பகுதியில் அதிக காயமடைந்து சிகிச்சை பெற்று தற்போது சிரமத்துடன் நடந்து வருகிறார். ஜோதி தனக்கு இழப்பீடு கேட்டு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடந்தது.

இந்தநிலையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக ஜோதிக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் சம்மதித்தது. இதைத்தொடர்ந்து ஜோதிக்கு ரூ.12 லட்சம் இழப்பீடுக்கான உத்தரவை நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி வழங்கினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜரானார்.

இதுபோல் தாராபுரம், உடுமலை, காங்கேயம், அவினாசி, பல்லடம் ஆகிய கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பண விவகாரம், குடும்பநல வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் வழக்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 335 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 2 ஆயிரத்து 924 வழக்குகளுக்கு ரூ.53 கோடியே 72 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் திருப்பூரில் 1,526 வழக்குகள் ரூ.28 கோடியே 26 லட்சத்தில் சமரசம் செய்யப்பட்டதும் அடங்கும்.


Next Story