போதிய மழை பெய்தும்: 219 கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலை - வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததே காரணம்


போதிய மழை பெய்தும்: 219 கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலை - வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததே காரணம்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:07 PM GMT (Updated: 14 Dec 2019 11:07 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்தும், 219 கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சாரசரியாக பெய்ய வேண்டிய மழை 820.1 மில்லி மீட்டராகும். இதுவரை 782.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,050 கண்மாய்கள் உள்ளன. ஆனாலும் எந்த கண்மாயும் முழுமையாக நிரம்பவில்லை. 110 கண்மாய்களில் 3 மாதம் வரை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. 248 கண்மாய்களில் 2 மாதம் வரையிலான பாசனத்திற்கும், 172 கண்மாய்களில் ஒரு மாத பாசனத்திற்கும் மட்டுமே தண்ணீர் உள்ளது.

மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பிளவக்கல் அணை திறக்கப்பட்டதால் அதன் கீழ் உள்ள 40 கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கண்மாய் உள்பட 219 கண்மாய்களில் முற்றிலுமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணம் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும், தூர்வாரப்படாமல் உள்ளது தான்.

மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் போது கண்மாய்களில் நீரை தேக்கி வைத்தால்தான் பயிர்சாகுபடி பலனுள்ளதாக அமையும்.

இந்த மாவட்டத்தில் நடப்பாண்டில் 19 ஆயிரத்து 110 ஏக்கரில் நெல் சாகுபடியும், 41 ஆயிரத்து 140 ஏக்கரில் சிறுதானிய வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர் மழை காரணமாக பயிரிடப்பட்ட வெங்காய பயிர்கள் அழுகல் நோய் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது. குடிமராமத்து பணிகள் மூலமாக பல்வேறு கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் கண்மாய்களில் நீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிமராமத்து பணிகளின்போது கண்மாய்களில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆழப்படுத்தாமல் பெயரளவுக்கு கரைகளை மட்டும் மண்ணை போட்டு பலப்படுத்தி விட்டனர். மழை பெய்து கரைகளில் போடப்பட்ட மண்ணும் கரைந்துபோகும் நிலை ஏற்பட்டுவிட்டது. குடிமராமத்து பணி முறையாக கண்காணிக்கப்படாததால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

எனவே இனிவரும் காலங்களிலாவது கண்மாய்களை மராமத்து செய்யும்போது நீர்பிடிப்பு பகுதிகளை ஆழப்படுத்துவதுடன் அந்த கண்மாய்களுக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து மழை நீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை கண்மாய்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் சிறுபாசன கண்மாய்களையும் மராமத்து செய்து, அதை நம்பியுள்ள விவசாயிகளுக்கும் பாசன வசதி செய்து தர வேண்டியது அவசியமாகும்.

Next Story