திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 3:45 AM IST (Updated: 15 Dec 2019 8:13 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் கடந்த 10–ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபம் வருகிற 20–ந் தேதி வரை தொடர்ந்து காட்சி அளிக்கும்.

தீபத் திருவிழாவின்போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் கோவிலுக்கு அதிகளவில் வருவதாலும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் காணப்பட்டனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவிலில் பொது மற்றும் கட்டண வழியில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசனம் வழியில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக பக்தர்கள் கூறினர்.

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரிய நந்திக்கு எதிரே உள்ள கோபுரத்தின் வழியாக பக்தர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியாமல் நெரிசலில் சிக்கினர். இதனால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேபோல் வரிசையில் சென்ற பக்தர்களிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் போலீசார் உரிய வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி வரிசையாக கோவிலுக்கு தரிசனம் செய்ய வேண்டும். ஆனால் போலீசார் தங்களுடன் வந்தவர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதிலேயே மும்முரமாக உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story