கரூர் நகராட்சி கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது


கரூர் நகராட்சி கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 9:38 PM IST)
t-max-icont-min-icon

கரூர் நகராட்சி கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது.

கரூர்,

கரூர் நகராட்சியில் கரூர், தாந்தோணி, இனாம்கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், செங்குந்தபுரம், வெங்கமேடு போன்ற பகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 67 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கின்றன. இதை தவிர டெக்ஸ்டைல் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், பஸ்பாடி, கொசுவலை என பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை பரவலாக இருக்கின்றன. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை குப்பை மேலாண்மை திட்டத்தின்கீழ் மோட்டார் ரிக்‌ஷாவில் சென்று துப்புரவு பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்து வாங்கி வருகின்றனர். இதில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் நுண்ணுயிரி உரக்கூடங்களில் அரைக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக், பாலித்தீன் பை, இரும்பு, தகரம், டயர், ரப்பர், கண்ணாடி ஆகிய மக்காத குப்பைகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் விற்கப்பட்டு அந்த தொகை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தூய்மையாகிறது குப்பை கிடங்கு

இதன் காரணமாக கரூர் பாலம்பாள்புரத்தை அடுத்த வாங்கல் ரோட்டில் நீண்டகாலமாக உள்ள குப்பை கிடங்கிற்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் குப்பைகளை தேக்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடும் என்பதாலும், மேலும் வெயில் காலங்களில் திடீரென குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டும், மேலும் காற்றடிக் கும் காலத்தில் கிடங்கிலிருந்து குப்பைகள் பறந்து சென்று குடியிருப்புகளுக்குள் விழுவதால் சுற்றுப்புறமாசு ஏற்படுகிறது. அதனை தடுக்கும் பொருட்டும் வாங்கல் ரோட்டில் உள்ள கரூர் நகராட்சி குப்பைகிடங்கினை சலித்தெடுத்து அதிலுள்ள மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டு கடந்த மாதம் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

பயோ-மைனிங் முறையில் பணி

தொடர்ந்து தற்போது ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் மக்கும், மக்காத குப்பைகள் கலந்து தான் கிடக்கின்றன. இதனால் குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து நீளமான கோடு போல் ஆங்காங்கே குவித்து வைத்து, அதில் குப்பையினை மக்க செய்யும் வகையிலான ரசாயனத்தை தெளித்து புரட்டி எடுக்கப்படுகிறது. பின்னர் பயோ-மைனிங் என்கிற முறையில் நவீன எந்திரங்களில் போட்டு சலித்தெடுத்து உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து பிரிந்து வருகிற பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு உள்ளிட்ட மக்காத பொருட்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குப்பை கிடங்கிலுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி அந்த நிலத்தை மீட்டெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் குப்பை கிடங்கிற்கு நவீன எந்திர தளவாடங்கள் வரவழைக்கப்பட்டு அதனை பொறியாளர்கள் குழுவினர் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ரூ.9 கோடியே 33 லட்சம் மதிப்பில்...

இது தொடர்பாக கரூர் நகராட்சி ஆணையர் சுதா நிருபர்களிடம் கூறுகையில், கரூர் நகராட்சி குப்பை கிடங்கானது வாங்கல் ரோட்டில் 12½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 738 கியூபிக் மீட்டர் கொள்ளளவில் நீண்ட காலமாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் கரூர் கிடங்கிலுள்ள குப்பைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்துவதற்கு ரூ.9 கோடியே 33 லட்சம் மதிப்பில் பணிகள் நடக்கிறது. ஏற்கனவே தஞ்சாவூர் கும்பகோணம், திருவள்ளூர், பம்மல் போன்ற இடங்களில் குப்பை கிடங்குகள் சலித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. அந்த வகையில் தான் கரூர் நகராட்சியில் தூய்மை பணிகள் நடக்கிறது. இன்னும் 25 நகராட்சிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

அபராதம் விதித்து நடவடிக்கை

குப்பைகளுக்கு குட்பை சொல்லும் அளவுக்கு குப்பை மேலாண்மை திட்டம் உள்ளது. எனவே கரூர் நகரட்சி பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் துப்புரவு பணியாளர்களிடம் குப்பை கொடுக்கிற போது அதனை மக்கும், மக்காதவை என பகிர்ந்தளிக்க வேண்டும். இங்குபெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள ஒரு சிமெண்டு ஆலை பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற மக்காத குப்பைகள் அரைத்து தூளாக்கப்பட்டு பேவர் கற்கள் தயாரிப்பு பணி உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுகிறது.

எனவே பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாறாக குப்பை ஆங்காங்கே கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story