உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு


உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:15 AM IST (Updated: 15 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை கலெக்டர் விஜயகார்த்தியேன் ஆய்வு செய்தார்.

திருப்பூர், 

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 27-ந் தேதி முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இதுபோல் 2-ம் கட்ட தேர்தல் 30-ந் தேதி அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாவட்ட 17 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை 1, 1 ஏ, 3, 4 மற்றும் 5 ஆகிய அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது.

இதுபோல் வாக்குப்பதிவு அலுவலர்களான நிலை 2 மற்றும் 6 ஆகிய அலுவலர்களுக்கு 26-ந் தேதி பயிற்சி நடக்கிறது. பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவிற்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் போது செய்ய வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவிற்கு பின் செய்ய வேண்டிய பணிகள் குறித்து 9 ஆயிரத்து 837 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் அவினாசி சேவூர் சாலை சூலை கொங்கு கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சியினையும் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுப்பிரமணியம் (வளர்ச்சி), சந்திரகுமார் (தேர்தல்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, செல்வராஜ் (திருப்பூர்), ஹரிகரன், சாந்திலட்சுமி (அவினாசி), அவினாசி தாசில்தார் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story