திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நெதர்லாந்து வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை


திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நெதர்லாந்து வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 Dec 2019 3:30 AM IST (Updated: 15 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ள நெதர்லாந்து நாட்டு வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயம் சுவையாக இருப்பதால் பொது மக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திருப்பூர், 

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த மாநிலங்களில் சீசன் முடிந்து விட்டதாலும், மழை பாதிப்பாலும் வெங்காய வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை ரூ.150 வரை உயர்ந்து விட்டது. இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் மார்க்கெட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க மொத்த வியாபாரிகள் எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்கி விற்க தொடங்கி உள்ளனர். தற்போது கர்நாடகா மற்றும் மராட்டிய வெங்காயம் வரத்து தொடங்கி உள்ளதால் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் நெதர்லாந்து நாட்டு வெங்காயம் 10 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெங்காயம் மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து வெங்காய மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

நெதர்லாந்து நாட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள வெங்காயத்தை தரம் பிரித்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்கிறோம். ஓட்டல்கடைக்காரர்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இந்த வெங்காயம் நன்கு உலர்ந்த நிலையில் தரமானதாக உள்ளது.

இந்த வெங்காயத்தை சுவைத்து பார்த்ததில் நம்நாட்டு வெங்காயத்தை போலவே சுவையாக இருக்கிறது. சில்லரையில் வெங்காயம் வாங்க வந்த பொதுமக்களும் சுவைத்துப்பார்த்து விட்டு ஆர்வத்துடன் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இதனால் இந்த வெங்காயம் விற்பனை நன்றாக இருக்கிறது..

தற்போது கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் ஒரு கிலோ ரூ.50 வரை குறைந்து விடும்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story