வடகாத்திப்பட்டியில் பராமரிப்பின்றி அழிந்து வரும் மின்வாரிய குடியிருப்புகள்
வடகாத்திப்பட்டியில் உள்ள மின்பகிர்மான அலுவலகத்தில் மின் நிலைய ஊழியர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளது.
அணைக்கட்டு,
குடியாத்தம் தாலுகா மாதனூரை அடுத்த வடகாத்திப்பட்டியில் துணை மின் நிலைய அலுவலகம் உள்ளது. இங்கு 110 கிலோ வாட் திறன்கொண்ட மின்சாரத்தை தேக்கி பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும் துணை மின்நிலையமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரியம் சார்பில் சுமார் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த மின்பகிர்மானத்தில் இரவு, பகல் பாராமல் மின்சாரத்தை பகிர்ந்து கொடுப்பதற்காகவும், திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்து சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்குவதற்காகவும் மின் ஊழியர்களுக்கு அங்கேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்பதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் 20 மின்வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டது.
மின்வாரிய குடியிருப்புகள் கட்டி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த குடியிருப்பில் மின்வாரிய ஊழியர்கள் தங்குவதில்லை என கூறப்படுகிறது. அதனால் தான் இந்த குடியிருப்புகள் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது.
தற்போது மாதனூர், அகரம்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு என தனித்தனியாக இளநிலை மின்பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மின்பகிர்மான அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஒருசிலரே பணியில் இருப்பதால் மின் தடையை உடனடியாக சீரமைக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் துனை மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்தால் மின்தடை ஏற்படும் போது உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே வடகாத்திப்பட்டியில் உள்ள மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story