சின்னசேலம் அருகே, நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - வாலிபர் கைது


சின்னசேலம் அருகே, நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2019 4:15 AM IST (Updated: 15 Dec 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் வனத் துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை சமூக விரோதிகள் சிலர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் போலீசார் அவ்வப்போது வனப்பகுதி அருகில் உள்ள குடியிருப்புகளில் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் ஒருவருடைய விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டுத்துப்பாக்கிகளை நேற்று முன்தினம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த அந்தோணி (வயது 25), பு‌‌ஷ்பராஜ்(25), லியோ பிரகா‌‌ஷ்(22), ஜோசப் ராஜ்(22), ஜான் ரோசாரியோ(25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த ஊமையன் என்கிற துரைசாமி (35) என்பவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், நாககுப்பம் கிராமத்துக்கு சென்று துரைசாமி பயன்படுத்தி வந்த ஒரு குடோனில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். துரைசாமி அந்த குடோனை நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையாக பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 3 நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதற்கு தேவையான கருவிகள், கட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துரைசாமியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story