காஞ்சீபுரம் அருகே புதிதாக அமைய உள்ள விமான நிலையத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


காஞ்சீபுரம் அருகே புதிதாக அமைய உள்ள விமான நிலையத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 15 Dec 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே புதிதாக அமைய உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் பன்னாட்டு விமானநிலையம் புதிதாக அமைய உள்ளது. பரந்தூரை சுற்றி 12 கிராமங்களில் 4,700 ஏக்கரில் இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இதில் 50 சதவீதம் அரசு நிலமும், 50 சதவீதம் விவசாய நிலமும் கையகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதில் பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிபடி, ஓ.ஏ. மங்களம், எடையார்பக்கம், குணகரபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். ஏகனாபுரம் பஸ் நிலையம் அருகே அந்த பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

இந்த பகுதியில் அரசு பன்னாட்டு விமானநிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையப்படுத்த உள்ளது. காலம் காலமாக நாங்கள் விவசாயம் செய்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரமே விவசாயம்தான். விமானநிலையத்துக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்த நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

எங்கள் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம். எங்கள் நிலத்தை கையகப்படுத்தாமல் விட்டால் போதும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

சுமார் 2 மணிநேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Next Story