கும்பகோணம் அருகே வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் சாவு தந்தை, தம்பிக்கு தீவிர சிகிச்சை


கும்பகோணம் அருகே வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் சாவு தந்தை, தம்பிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 Dec 2019 11:15 PM GMT (Updated: 15 Dec 2019 7:12 PM GMT)

கும்பகோணம் அருகே வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவனுடைய தந்தை மற்றும் தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் சமையல் செய்து வைத்துவிட்டு ஆடுகளை மேய்க்க சென்றுவிட்டார்.

வீட்டில் இருந்த அவருடைய கணவர் சக்திவேல் மற்றும் குழந்தைகள் ஆகா‌‌ஷ்(வயது14), அபினா‌‌ஷ்(12) ஆகிய 3 பேரும் ஜெயந்தி சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் மதியம் சக்திவேல், ஆகா‌‌ஷ், அபினா‌‌ஷ் ஆகிய 3 பேருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதனால் அவதிப்பட்ட அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் ஆகா‌‌ஷ் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனுடைய தந்தைக்கும், தம்பிக்கும் குத்தாலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சிறுவன் ஆகா‌‌ஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவனுடைய தம்பி அபினாசை திருப்பனந்தாளில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவன் ஆகா‌‌ஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

வீட்டில் சமைத்த உணவில் வி‌‌ஷப்பூச்சி விழுந்ததாகவும், இதை அறியாமல் 3 பேரும் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சுகாதார அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்பது மக்களின் கவலையாக உள்ளது. இந்த நிலையில் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்ட சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகாதார வசதிகளை சரிவர செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story