பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தூய்மை பாரத இயக்கம் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம்


பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தூய்மை பாரத இயக்கம் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தூய்மை பாரத இயக்கம் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர்,

இந்திய சுற்றுலாத்துறை மற்றும் ஆந்திராவில் உள்ள இந்திய சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி கல்லூரி சார்பில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரசாரம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், வேளாங்கண்ணி, திருவாரூர் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 9-வது இடமாக தஞ்சை பெரியகோவிலில் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை, ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி மாணவருமான ஜெயக்குமார் தலைமையில் மாணவர்கள் பா‌ஷா, சுரேந்தர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

தஞ்சை பெரியகோவிலில் மயிலாட்டம், உருமிமேளம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், பாலிதீன் பைகளுக்கு பதில் துணி பைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு துணி பைககளையும் வழங்கினர். தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினர். சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக உறுதி ஏற்கும் வகையில் கையொப்பமும்போட்டனர்.

Next Story