ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க காரணமான மாணவனுக்கு பாராட்டு


ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க காரணமான மாணவனுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 15 Dec 2019 10:45 PM GMT (Updated: 15 Dec 2019 8:05 PM GMT)

ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்க காரணமான 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகுவிந்து வருகின்றன.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சச்சின் (வயது 11). இவர் கறம்பக்குடி பச்சநாயகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆங்கில வழி கல்வியில் படிப்பதால் தமிழ் உச்சரிப்புகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது தந்தை ‘தினத்தந்தி' நாளிதழை வாங்கி கொடுத்து சச்சினை படிக்க சொல்வது வழக்கம். இதன்படி, தினத்தந்தி நாளிதழை படித்து கொண்டிருந்த போது, அதில் வந்த மக்கள் மேடை பகுதியையும் வாசித்துள்ளார்.

பின்னர் இதுறித்து அவரது தந்தையிடம் கேட்டாராம். நமது ஊர் குறைகளை எழுதினால் பிரசுரித்து அந்த குறைபாடுகள் அரசு அதிகாரிகளால் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சச்சின் அவரது பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பது குறித்தும், இதனால் மாணவர்கள் அப்பகுதி பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் தினத்தந்தி நாளிதழ் மக்கள்மேடை பகுதிக்கு எழுதினார். அது கடந்த மாதம் 18-ந்தேதி மக்கள் மேடை பகுதியில் பிரசுரமானது.

பாராட்டு

இதைப்பார்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, பேரூராட்சி சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் கறம்பக்குடி பச்ச நாயகம் சாலையை சேர்த்து திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சாலை டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக போடப்படாத சாலையை தினத்தந்தி நாளிதழ் மக்கள் மேடை பகுதி மூலம் போட செய்த 6-ம் வகுப்பு மாணவர் சச்சினுக்கு பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் கவிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இளம் வயதிலேயே பத்திரிக்கைக்கு எழுதி மக்களின் பிரச்சினை தீர காரணமான மாணவன் சச்சினுக்கு சமூக வலை தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story