காற்றில் பறந்த அதிகாரிகள் வாக்குறுதி: 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி
பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் வழியாக பழனி, கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வகையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 3 ரெயில் பாதைகள் செல்கின்றன. இந்த 3 ரெயில் பாதைகளுக்கு மேலாக பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
முதற்கட்டமாக பாலத்தை தாங்கும் தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மேலும் ரெயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கும் முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. மேம்பாலம் அமைக்கப்படாததால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) மேம்பால பணிக்காக நிலம் கொடுத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம், மேம்பால பணிக்காக நிலம் வழங்கியவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் மேம்பால பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், அப்போதைய கலெக்டர் டி.ஜி.வினய் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் மேம்பால கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். அதையடுத்து பொதுமக்களின் போராட்டமும் கைவிடப்பட்டது. ஆனால் இன்றுவரை மேம்பால பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டது. பல ஆண்டுகளாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் அங்குள்ள தூண்கள் பலமிழந்து வருகின்றன. இனியும் அதுபோன்று வாக்குறுதிகள் அளித்தார்கள் என்றால் அதனை கடற்கரை மணலில் தான் எழுதி வைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story