நாக்பூரில் 6 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர்; பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாக்பூரில் இன்று மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. 6 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் நிலவிய பெரும் அரசியல் குழப்பங்களுக்கு பின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.
புதிய அரசில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
2 வாரங்களுக்கு பிறகு மந்திரிகளுக்கு கடந்த 12-ந் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் திடீரென தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் சகன் புஜ்பால், ஜெயந்த் பாட்டீல் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.
இந்தநிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) நாக்பூரில் தொடங்குகிறது. வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த முறை புதிய அரசு அமைவதில் நீடித்த குழப்பம் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்குகிறது.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 21-ந் தேதி வரை 6 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
குளிர்கால கூட்டத் தொடரில் ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை பணிக்கு தடை, விவசாயிகள் பிரச்சினைகள், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு, குடியுரிமை சட்டத்தை மராட்டியத்தில் அமல்படுத்துவதில் சிவசேனா கூட்டணி அரசின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளது.
இதனால் மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய அரசில் பதவி ஏற்ற மந்திரிகளுக்கு தற்போது செய்யப்பட்டு உள்ள இலாகா ஒதுக்கீடு தற்காலிகமானது. அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் குளிர்கால கூட்டத்தொடரை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை போல தெரிகிறது.
எனவே இது கேலிக்கூத்தான கூட்டத்தொடராகத்தான் இருக்கும்.
மாநிலத்தின் நிதிநிலை குறித்து வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பட்ஜெட்டுக்கு வெளியே சில கடன்கள் பெறப்பட்டன. ஆனால் அது பட்ஜெட்டின் ஒரு பகுதியாக காட்டப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள கடன் அளவு உயர்த்தப்பட்டு உள்ளது. முக்கியமான திட்டங்களை ஒத்திப்போடுவதற்கு இந்த தகவல் பரப்பப்படுகிறது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ரூ.23 ஆயிரம் கோடி அரசு வழங்க வேண்டும் என முன்பு சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் கூறியது.
தற்போது அதை அவர்கள் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே அந்த தொகையை தற்போதைய அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.
இது எங்களது கோரிக்கை அல்ல. அவர்கள் கூறியதை தான் சுட்டி காட்டுகிறோம்.
சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கரை ராகுல்காந்தி அவதூறு செய்ததை சட்டசபையில் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி நேற்று முதல்-மந்திரியின் விருந்தினர் மாளிகையில் தேநீர் விருந்து நடந்தது. இதை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
Related Tags :
Next Story