யுவராஜை ஜாமீனில் விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருக்க முயற்சி: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் 250 பேர் கைது


யுவராஜை ஜாமீனில் விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருக்க முயற்சி: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் 250 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 16 Dec 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

யுவராஜை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் சங்ககிரியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க வந்த 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சங்ககிரி,

ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை 18 மாதங்களில் முடிக்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை மதுரை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுமார் 4 மாதங்கள் ஆகிறது. இதுவரை 8 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்க முயற்சி

இதனிடையே வழக்கு விசாரணை தாமதம் ஆகிறது, யுவராஜ் உள்ளிட்ட 14 பேரும் தொடர்ந்து சிறையில் உள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது இந்த வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே அந்த அமைப்பினர் யுவராஜின் மனைவி சுஜிதா தலைமையில் சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதை மீறி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையை சேர்ந்த 250 பேர் சங்ககிரி புதிய பஸ் நிலையம் பகுதிக்கு நேற்று காலை 9.30 மணியளவில் உண்ணாவிரதம் இருக்க வந்தனர்.

அப்போது அங்கு வந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க அனுமதியில்லை என்று கூறி, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து அவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

250 பேர் கைது

இதையடுத்து யுவராஜின் மனைவி சுஜிதா, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை மாநில பொருளாளர் கந்தசாமி, மாநில இளைஞரணி செயலாளர் சதீஷ் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சங்ககிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்து மக்கள் கட்சி நிறுவனர் ஆதரவு

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் காவலில் வைக்கப்பட்டு இருந்த திருமண மண்டபத்துக்கு நேரில் வந்து நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story