விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது - வேளாண் இயக்குனர் தகவல்


விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது - வேளாண் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2019 3:45 AM IST (Updated: 16 Dec 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள உர நிறுவனங்களில் யூரியா இருப்பு, வினியோகம் குறித்து வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் சாகுபடி 13.86 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 9.03 லட்சம் ஹெக்டேரிலும், பயறு வகைகள் 5.65 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 2.80 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி, கரும்பு பயிர்கள் 2.50 லட்சம் ஹெக்டேரிலும் என மொத்தம் 33.84 லட்சம் ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ராபி பருவ சாகுபடிக்கு தேவையான 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பருவமழை பெய்துள்ளதால் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக யூரியா தேவை அதிகம்.

இதனிடையே ஸ்பிக் நிறுவனம் இயந்திர கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் யூரியா உற்பத்தியை நிறுத்தியது. இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதன்பேரில் நவம்பர் மாதத்துக்கு 1.53 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மத்திய அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை பெற்று அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.

டிசம்பர் மாதத்துக்கு 1.18 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 69 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 1.08 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது. இதில் சீனாவில் இருந்து கப்பலில் வந்துள்ள யூரியாவில் 67,450 மெட்ரிக் டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வகை உரங்களையும் இருப்பு வைத்து வழங்கிட தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராமசாமி, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், கருணாநிதி, வேளாண்மை உதவி இயக்குனர் சுரே‌‌ஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story