உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் கலெக்டர் அறிவுரை


உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக 14 மண்டல அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இவற்றில் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் (முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் பி.1 முதல் பி.6 வரை) 1,366 அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதில் வாக்கெடுப்புக்கு முதல் நாள் செய்ய வேண்டிய பணிகளான, வாக்குச்சாவடியை தயார் செய்தல், வாக்காளர்கள் சென்று வர தனித் தனியே வழிகள் ஏற்படுத்துதல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், தடை செய்யப்பட்ட பகுதியான 100 மீட்டர் எல்லை குறித்தல், வாக்கு பதிவுக்கு முன்னதாக வாக்குச்சாவடியை ஒரு மணி நேரத்திற்கு தயார் நிலையில் வைத்திருத்தல், உரிய படிவங்கள் கையாளுதல், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணத்தை சரிபார்த்து வாக்காளர் பட்டியல் வரிசை எண், பெயர் உள்ளிட்டவைகளை வாக்காளர்களுக்கு எடுத்துரைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பாக பணியாற்றிட வேண்டும்

உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிகளை நன்கு படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற அனைத்து நிலை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இருப்பறை மற்றும் வாக்கு எண்ணிக்கை அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சியின் போது உதவி திட்ட அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர் ஜாகீர் உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, ஜெபராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜின், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மற்றும் மண்டல அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story