இந்திய குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் - பெங்களூருவில் நடந்தது


இந்திய குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் - பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 16 Dec 2019 5:21 AM IST (Updated: 16 Dec 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

இந்திய குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பெங்களூரு,

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதை கண்டித்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங் களை எழுப்பினர். அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.

இதில் வாட்டாள் நாகராஜ் பேசியதாவது:-

நாட்டில் நூற்றுக்கணக்கான தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் தாண்டவமாடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்றியது ஏன்?. இந்த சட்ட மசோதா மீது விரிவான விவாதம் நடைபெறவில்லை.

இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மகாத்மா காந்தியின் தத்துவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக இது உள்ளது. ஜனநாயக மாண்புகள் நிலைக்க வேண்டுமென்றால் மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் பேசினார்.

Next Story