பெங்களூருவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்: கழுத்தை அறுத்து கார் டிரைவர் கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்: கழுத்தை அறுத்து கார் டிரைவர் கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Dec 2019 5:31 AM IST (Updated: 16 Dec 2019 5:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து கார் டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு பசவேசுவரா நகர் அருகே கமலாநகரில் வசித்து வந்தவர் சதானந்தா (வயது 33). டிரைவரான இவர், கார் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு சதானந்தா, தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக மஞ்சுநாத் நகரில் உள்ள மதுக் கடைக்கு சென்றார். இந்த நிலையில், குடிபோதையில் சதானந்தாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

மதுக்கடையில் இருந்து வெளியே வந்த பின்பும் மீண்டும் அவர்களுக்குள் தகராறு உண்டானது. இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த நண்பர்கள் சதானந்தாவை அடித்து உதைத்து தாக்கியதாக தெரிகிறது. பின்னர் நடுரோட்டில் வைத்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சதானந்தா உயிரிழந்தார். உடனே அங்கிருந்து சதானந்தாவின் நண்பர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பசவேசுவராநகர் போலீசார் விரைந்து வந்து சதானந்தாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சதானந்தாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதே நேரத்தில் சதானந்தா சிறு, சிறு ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரவுடி சம்பவங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு கார் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனால் சதானந்தாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, மதுக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி, அதில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் சதானந்தாவை கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சதானந்தாவின் நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் மஞ்சுநாத் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story