வெளிநாட்டினர் விரும்பி வாங்கி செல்லும் மசாலா


வெளிநாட்டினர் விரும்பி வாங்கி செல்லும் மசாலா
x
தினத்தந்தி 16 Dec 2019 12:37 AM GMT (Updated: 16 Dec 2019 12:37 AM GMT)

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் புதுவையில் பல நாட்கள் தங்கியிருக்கின்றனர்.

பிரான்சு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மாதக் கணக்கில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் புதுச்சேரியின் உணவு பழக்க வழக்கத்துக்கு மாறிவிடுகின்றனர்.

இந்த ருசிக்கு அடிமையாகும் அவர்கள் இதுபோன்ற உணவினை உண்ண விரும்புகின்றனர். ஆனால் தொடர்ந்து அவர்களுக்கு இந்த உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

ஏனெனில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தங்கும் விதமாக விசாவுடன் வரும் அவர்கள் அந்த நாட்கள் முடிந்ததும் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.

அப்போது தங்கள் நாட்டிலும் புதுவை உணவு சுவையை ருசிக்க விரும்பும் அவர்கள் இங்கிருந்து மசாலா தூளை எடுத்து செல்கின்றனர். அத்தகைய ருசியான மசாலாவை விற்பதற்காகவே புதுச்சேரியில் ஏராளமான கடைகள் உள்ளன.

அவர்கள் மசாலாவை பாக்கெட் செய்து வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொடுக்கின்றனர். அதை அவர்கள் வாங்கி செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றபின் வேறு யாராவது புதுச்சேரிக்கு வந்தால் குறிப்பிட்ட கடைகளை சொல்லி மசாலா வாங்கி வருமாறு கூறுகின்றனர்.

அதன்படி சுற்றுலா வருபவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என விரும்புபவர்களுக்கு அந்த மசாலாவை வாங்கிக் கொடுத்து வருகின்றனர். பிரான்சு, லண்டன், ஜெர்மன் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுவையில் இருந்து மசாலாக்களை வாங்கி செல்வதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானத்தில் 20 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றால் அதில் பெருமளவு இடத்தை மசாலா பொருட்களே பிடித்துக்கொள்கின்றன.

இதுதொடர்பாக பெரிய மார்க்கெட்டில் மசாலா கடை வைத்துள்ள ராஜா கூறியதாவது:-

நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கடைக்கு பிரான்சு நாட்டை சேர்ந்த பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். சிலர் தங்கள் பேரக்குழந்தைகளுக்கும் எங்கள் கடையை அடையாளம் காட்டி உள்ளனர்.

இங்கிருந்து மசாலா வாங்கி செல்லும் அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் பரிசளிக்கின்றனர். வெளிநாட்டினர் பெரும்பாலும் காரமான உணவினை சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்காக அதிக காரமில்லாமல் மசாலா தயாரிக்கிறோம். கிலோ ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கிறோம். இவ்வாறு ராஜா கூறினார்.

Next Story