புழல் அருகே 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து: ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்


புழல் அருகே 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து: ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

புழல் அருகே 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. புழல் காவாங்கரை தண்டல் கழனி ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள இவருக்கு சொந்தமான 4 குடோன்களை வாடகைக்கு விட்டு உள்ளார்.

அதில் ஒரு குடோனில் ரசாயன பேரல்களும், அருகில் உள்ள மற்றொரு குடோனில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மர பொருட்களும் இருந்தன. மற்ற 2 குடோன்களிலும் அட்டைப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் ரசாயன பேரல்கள் இருந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அங்கிருந்த ரசாயன பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

அப்போது அருகில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் இருந்த குடோனுக்கும் தீ பரவியது. 2 குடோன்களிலும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் லோகநாதன், பாலசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் அம்பத்தூர், செங்குன்றம், தண்டையார்பேட்டை, செம்பியம், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்களில் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடோன்களில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் ரசாயன பேரல்கள் தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்துபோனதால் 18 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 1 மணியளவில் குடோன்களில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

எனினும் தீ விபத்தில் 2 குடோன்களிலும் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், மரப்பொருட்கள், ரசாயன பேரல்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த குடோன்களுக்கு அருகில் குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. அருகில் உள்ள மற்ற 2 குடோன்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ பராமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்தில் மாதவரம் துணை கமிஷனர் ரவளிபிரியா, புழல் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ஜவகர்பீட்டர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story