பாகாயம் முதல் அடுக்கம்பாறை வரை ரூ.30 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் - தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வேலூரை அடுத்த பாகாயம் முதல் அடுக்கம்பாறை வரை உள்ள சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை,
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது. இருப்பினும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் சாலைகள், குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரும் அவதிப்படுவதுடன், சில நேரத்தில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிப்பதுடன், தேவைப்படும் இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்யவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலை தற்போது ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், சில நேரங்களில் வாகன போக்குவரத்தில் நெரிசலும் ஏற்படுவதால், பொதுமக்கள் அதிக அளவில் அவதிப்படுகின்றனர். எனவே வேலூரில் இருந்து ஆரணி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பாகாயம் முதல் அடுக்கம்பாறை வரை உள்ள சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதுடன், தரத்துடன் கூடிய புதிய தார்சாலை அமைக்கும் பணியும் நடந்துவருகிறது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அடுக்கம்பாறையில் மழைநீர் செல்ல தரைப்பாலம் மற்றும் இடையஞ்சாத்து, ராமலிங்கநகர், பாகாயம் உள்ளிட்ட இடங்களில் சிறிய தரைப்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் அகலம் உள்ள 2 வழிச்சாலை, 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழிச்சாலையாகவும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையின் ஓரத்தில் தேவைப்படும் இடத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக கால்வாய்களும், குடிநீர் குழாய்களும் அமைக்கப்படுகிறது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story